சிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி.? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி.? சிவராத்திரி பலன்கள்.?
சிவராத்திரி வழிபாடு
ஞாலங் கருதினுங் கைகூடும் காலங் கருதி இடத்தாற் செயின்.
காலம் அறிந்து செயலைச் செய்ய வேண்டும். இதனால் பயன் அதிகம் பெறலாம். சிவ விரதங்களில் சிறந்தது சிவராத்திரி விரதமே ஆகும். ‘சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு துக்கங்களைப் போக்கிச் சுகத்தை நல்குவது என்பதே பொருளாகும்.
சிவராத்திரி விரதம் : மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியன்று வருவது மகா சிவராத்திரியாகும். மக்களாய்ப் பிறந்தவர்கள் இந் நாளைப் பொன்னேபோல் போற்றி வழிபட வேண்டும். அதிகாலையில் எழுந்து நீராடி, திருநீறணிந்து, உத்திராட்சம் அணிந்து, சிவபூசை செய்தும், ஐந்தெழுத்து (ஓம்சிவாயநம) ஓதுதல் வேண்டும். பகல் முழுவதும் உணவருந்தாமல் இருத்தல் வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் அருந்தலாம்.
மாலையில் மீண்டும் நீராடி, சிவாலயம் சென்று நெய் விளக்கு ஏற்றலாம். அகங்குழைந்து தேவாரத் திருமுறைகளை ஓதலாம். இரவில் நான்கு காலங்களில் சிவபூசை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் கோயிலில் நடைபெறும் பூசைகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மறுநாள் காலை நீராடி சிவபூசை முடித்து விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வித வழிபாடு புரிந்தவர்களின் வினைகள் யாவும் தீயிலிட்ட பஞ்சுப்போல் எரிந்து ஒழிந்துவிடும்.
உலகங்களும் உயிர்களும் ஒடுங்கும் கற்பமுடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமையம்மையார் சிவபெருமானை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி என வழங்கப் பெறுகிறது. இந்நாளில் வழிபடும் அனைவருக்கும் சகல நன்மைகளையும் அருள வேண்டும் என இறைவி வேண்ட, சுவாமியும் அவ்வாறே அநுக்கிரகம் செய்தருளினார்.
சிவராத்திரி வரலாறு: மேலும் சிவராத்திரி தினத்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு, பிரமனும், திருமாலும் ‘தானே பிரம்மம்’ என்று போட்டியிட்டனர். அப்போது பரம்பொருள் (சிவபெருமான்) மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி கூடிய இரவில் அனற்பிழம்பாய் எழுந்தருளினார். இதனுடைய அடியையும் முடியையும் இருவரும் காணாமல் திகைத்தனர். பின்பு சிவபெருமான் இவர்கட்குத் தம் உருவைக் காட்டி அருளிய இரவும் இதுவேயாம்.
‘இலிங்கோத்பவ காலமாகும்’.
இக்காலம் இரவு 11.30 மணிக்கு மேல் 1.00 மணி வரையாகும். இந்த நேரத்தில் ஒருமைப்பட்ட மனதுடன் ஐந்தெழுத்தை தியானம் செய்வது மிகுந்த பலனை அளிப்பதாகும்.
சிவராத்திரி பயன் : பஞ்சமா பாதகம் செய்த கொடியவனும் சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்து முக்தி பெற்ற வரலாறுகள் உண்டு. இத்தினத்தன்று செய்யும் தானம், ஜெபம், தருமம் முதலியவை பலநூறு மடங்காகப் பெருகி இகபர நலன்களை நல்கும். ‘சிவராத்திரி’ தினம் கிடைப்பது மிகவும் அரிய விஷயமாகும். சைவனாகப் பிறந்த யாவரும் இந்நாளில் மேற்கூறியவாறு வழிபாடு செய்து தப்பாமல் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, அம்மையே “சிவலோகம்” ஆளும் பேறு பெறும்படி வேண்டி அமைகிறேன்.
மேலும், இவ்விரதம் நோற்றே பிரமன் படைப்புத் தொழிலையும், திருமால் காத்தல் தொழிலையும், இந்திரன் பொன்னுலகத்தையும். குபேரன் அளகாபுரியினையும் பெற்றார்கள். எத்தகைய தீவினையும் இவ்விரதத்தினால் அழிந்தொழியும்.